மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்தது மின்சாரம் பாய்ந்து காட்டுயானை பலி

கோவை: கோவை அருகே மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் அடுத்துள்ள ராவுத்துகொல்லனூர். மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள இந்த வனப்பகுதியில் குருவம்மாள் கோவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் சிக்கிள் பேஸ் மின் கம்பங்கள் உள்ளன. நேற்று முன்தினம் உணவு மற்றும் குடிநீர் தேடி அருகில் உள்ள குருடிமலை அடிவார பகுதியில் இருந்து ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது. அப்போது, இந்த பகுதியில் மழை பெய்த ஈரம் அதிமாக இருந்தது. அப்போது, மின் கம்பத்தில் யானை உரசியது.  

இதில், மின் கம்பம் முறிந்து யானை மீது விழுந்ததில் அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்து யானை பிளிறியது. தகவல் அறிந்து மின்சாரத்துறையினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். வனத்துறையினர் யானையை பரிசோதனை செய்தபோது அது இறந்தது தெரியவந்தது. பலியான ஆண் யானைக்கு 30 வயது இருக்கும் என அவர்கள் கூறினார். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்த பின் அதே இடத்தில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டது. யானை இறந்ததை அறிந்து பொதுமக்கள் சோகத்துடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: