அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் அமைச்சர் புகழாரம்

நெல்லை:அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று நெல்லையில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி’  குஜராத்தில் வரும் ஏப்.17ல் தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பான சிறப்பு அழைப்பு நிகழ்ச்சி, நெல்லையில் நடந்தது. இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் பங்கேற்று பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி போல, தற்போது குஜராத் மாநில மற்றும் ஒன்றிய அரசு இணைந்து  `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது. குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மற்றும் மதுரை, சென்னை, நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களில் உள்ள கலாசார தொடர்பை கண்டறிய இந்த விழா உதவும். பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வந்த சவுராஷ்டிரா மக்கள், இந்த பகுதி மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.

குஜராத்  `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 3 ஆயிரம் பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்கள் மதுரையில் இருந்து தனி ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். நெல்லையில் மட்டும் சவுராஷ்டிரா தமிழர்கள் 60 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் அளித்த பேட்டியில், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக பாரம்பரியமிக்க வரலாற்று சிறப்பு மிக்க கலைக்கோயில்கள் உள்ளன. தமிழ்நாடு மிகவும்  சிறப்பான மற்றும் அமைதியான மாநிலமாக உள்ளது. வந்தாரை வாழ வகைக்கும் மாநிலமாக திகழ்கிறது. அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலமாக உள்ளது. இங்கு வருபவர்களை தமிழ்நாடு மக்கள் ஆதரித்து அரவணைத்து நட்பாக பழகி வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது என்றார்.

Related Stories: