புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப்பணித்துறை பணி நீக்க ஊழியர்கள், குடிநீர் தொட்டி மீது பெட்ரோல் கேன்களுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை அரசு பொதுப்பணித்துறையில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை மீண்டும் பணியமர்த்த கோரி பலகட்ட பேராாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் மூலகுளம் எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள குடிநீர் தொட்டி மீது ஏறிய 20க்கும் மேற்பட்ட பணிநீக்க ஊழியர்கள் வேலை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தொட்டியின் கீழ் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த சீனியர் எஸ்பி நாரா சைதன்யா, எஸ்பிக்கள் வம்சிதர ரெட்டி, சுவாதி சிங் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்குழுவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர், அமைச்சர், துறை செயலர் தலையிட்டு தீர்வு காணும் வரை போராட்டத்தை தொடருவோம் எனக்கூறி அங்கேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சிலர் பெட்ரோல் கேன்களுடன் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் தொட்டி மீது ஏறி அவர்களை கைது செய்ய முயன்றனர். மேலே வந்தால், தீக்குளிப்பதோடு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதால் போலீசார் பின்வாங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தலைமையில் போராட்ட குழுவினர் சட்டசபையில் முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், தலைமை பொறியாளர் ஆகியோரை சந்தித்தனர். அப்போது 2015ம் ஆண்டு யாரெல்லாம் துறையின் சார்பில் கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கியுள்ளார்களோ, அந்த பட்டியலின் அடிப்படையில் தற்காலிக ஊழியராக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் உறுதியளித்தார். இதனையேற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

Related Stories: