ஊழியருக்கு ரூ.14 லட்சம் சம்பளம் பாக்கி 30 ஆண்டுகளுக்கு பின் வங்கி ஜப்தி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுப்பையா (68). இவர் சிறுகம்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்  கடந்த 1977 முதல் 1993 வரை செயலாளராக பணியாற்றியுள்ளார். இந்த காலத்தில் அவருக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேல் ஊதியம் வழங்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதன்படி ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் ஊதியம் நிலுவையில் இருந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார். அவர் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட்டுறவு சங்கம் அவருக்கான சம்பள நிலுவைத்தொகையை வழங்கவில்லை என தெரிகிறது. இதனால், அவர் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரணை முடிவில் அவரது ஊதிய நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. இருப்பினும் அவர்கள் சம்பளத்தை கொடுக்காததால் சிறுசும்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் திருவாடானை நீதிமன்ற ஊழியர் ஆனந்தராஜ் நேற்று சிறுகம்பையூர் வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்த லேப்டாப், பீரோ, மேஜை ஆகியவற்றை ஜப்தி செய்தார்.

Related Stories: