கனரக வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு முகாம்: காவல் உதவி ஆணையர் பங்கேற்பு

பூந்தமல்லி: ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறை சார்பில், கனரக வாகன உரிமையாளர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், திருவேற்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் சுந்தரவதனம், பழனி, சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்தப் பகுதியில் சாலையின் இரு மார்க்கங்களிலும் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை பகுதிகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உதவி ஆணையர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகரம் விரிவடைந்து வருவதால் அதற்கேற்ப போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், சர்வீஸ் சாலைகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகன உரிமையாளர்களையோ, ஓட்டுநர்களையோ சிரமப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு உதவி செய்வதே காவல்துறையின் நோக்கம்.. லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். வாகன ஓட்டுநர்களை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. அதை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிரும் முக்கியம். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படும்.’’ என்றார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து போலீசார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: