ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அராபத் ஏரி மற்றும் கண்மாய்களில் கழிவு நீர் கலக்கப்படுகிறதா என பெருநகர வளர்ச்சி குழும தலைமை திட்ட அதிகாரி திடீர் ஆய்வு செய்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் அராபத் ஏரியில் சில வருடங்களாக ஏரியில் கழிவுநீர் கலந்து மாசடைந்து வருகிறது. ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாருமில்லாமல் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை திட்ட அதிகாரி ரவிச்சந்திரன் நேற்றுமுன்தினம் அராபத் ஏரியில் கழிவு நீர் கலக்கும் இடம் மற்றும் கண்மாய்கள் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.
இதில், ஏரியில் கழிவு நீரை சுத்திகரிக்க இரண்டு இடங்களில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மிட்டன மல்லி மற்றும் பட்டாபிராம் திருநின்றவூர் ஏரிகளிலும் ஆய்வை செய்தார். இந்த ஆய்வில் மாமன்ற உறுப்பினர் அமுதா பேபிசேகர், ஆவடி மாநகரச் செயலாளர் சன் பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.