சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி ஒருவர் படுகாயம் எதிரொலியாக,  தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, காப்பீடு வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்புதல், சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி இறக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் என பாண்டிச்சேரிக்கும் லாரிகளில் ஏற்றி விநியோகம் செய்யப்படுகின்றன.

இதனை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் வழக்கம் போல் குருபாதம் (52). ஒப்பந்த தொழிலாளி. எரிவாயு நிரப்பும் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, பாதி எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் தொழிலாளி குருபாதம் படுகாயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதன் எதிரொலியாக தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், காப்பீட்டு திட்டங்களை வழங்கிட வேண்டும், தொழிற்சாலையில் முறையாக அரசு ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆலை வாயிலில் ஐஓசிஎல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணிகளும், சிலிண்டர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மேற்கண்ட கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து பணிக்கு திரும்பினர்.

Related Stories: