முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல், அவர் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன் என்றும் நீதிபதி சொல்லி இருக்கிறார்.

மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. அதனை தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதி தீர்ப்பை வழங்க வேண்டியது உச்ச நீதிமன்றம். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23ம் தேதி தீர்ப்பு, 24ம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது பாஜ அரசு. ராகுல் காந்தியை பார்த்து எந்தளவுக்கு பாஜ தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன்மூலம் தெரிகிறது. அவரது இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் இதற்கு காரணம்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை ஒன்றிய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை. மீண்டும் அவரை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்துள்ளார்கள். இந்த தகுதிநீக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜ இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல. இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: