ராகுல்காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை, பாசிச தாக்குதல்: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்து, அவரின் உறுப்பினர் உரிமம் பறிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கனிமொழி எம்.பி. (திமுக): ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியை காட்டுகிறது. ஜனநாயகத்தை அவமதிக்கும் இதுபோன்ற செயல்களை எதிர்த்து எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கியது ஆணவத்தில் பாஜ செய்த அக்கிரமச் செயல். ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, மோடி அரசு செயல்படுகிறது. இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): எதிர்க்கட்சியின் முன்னணி தலைவரை தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கை. இனி நாட்டில் எவரும் பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து பேச முடியாது என்ற சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பாகும். குஜராத் சம்பவம் தொடர்பான ஆவணப்படம், அதானி குறித்து ஹிண்டன் பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தும் செய்திகளையும் நாட்டு மக்களின் கவனத்தில் இருந்து திசைதிருப்பும் நோக்கம் கொண்ட நடவடிக்கை. அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்கும் மரண அடியாகும்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளையும், செயல்பாட்டையும் விமர்சிப்பவர்களை மோடி அரசு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலாக பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி கண்டுள்ள பாஜ அரசு கலக்கமடைந்துள்ளது. இதனை மறைக்க எதிர்க்கட்சியினர் மற்றும் மாற்றுக் கருத்துகள் உள்ளவர்கள் மீது பழிவாங்கும் படலத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.

திருநாவுக்கரசர் எம்.பி. (காங்கிரஸ்): ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும், ஜனநாயகத்தின் குரல்வளையை  நெரிப்பதாகும். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை.

திருமாவளவன் (விசிக தலைவர்): ராகுல்காந்தியின் தகுதிநீக்கம் திட்டமிட்ட அரசியல் சதி, ஒன்றிய அரசின் எதேச்சதிகார போக்கை காட்டுகிறது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம் நடக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றால் தகுதி  நீக்கம் செய்யலாம் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கை.

நாராயணசாமி (புதுச்சேரி முன்னாள் முதல்வர்): ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது பாஜவின் திட்டமிட்ட செயலாகும். ராகுல் காந்தியின் குரலை ஒடுக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. (மமக தலைவர்): ராகுல் காந்தி நடத்திய தேச ஒற்றுமை நடை பயணம் பாஜ அரசிற்கு எதிராக ஏற்படுத்தியுள்ள எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல், இனி தேர்தல் அரசியலில் காங்கிரஸ் தலைமை தாங்கும் கூட்டணியை எதிர்கொண்டு வெற்றிப்பெறுவது சாத்தியமற்றது என்பதை உணர்ந்தும் பாஜ இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. ராகுல்காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்திருப்பது பாஜவின் திராணியற்ற செயல்.

எம்.கே.பைஸி (எஸ்டிபிஐ, தேசிய தலைவர்): ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததன் மூலம், இந்தியா எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்று பாஜ விரும்புகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாசிச பாஜவை தோற்கடிக்க இது ஒரு எச்சரிக்கை மற்றும் தெளிவான அறிகுறி. ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் இல்லாத, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்துத்துவா ராஷ்டிராவை உருவாக்க பாஜ விரும்புகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: