வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெற்பயிர், வேர்க்கடலை செடிகளை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெற்பயிர்கள், வேர்க்கடலை செடிகளை நாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம், தேவரியம்பாக்கம், கிதிரிபேட்டை, அகரம், மஞ்சமேடு, புளியம்பாக்கம், நத்தாநல்லூர், தொண்டன்குளம், உள்ளாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயம். இந்நிலையில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களில் நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

தற்பொழுது, இப்பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இதனை பாதுகாப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்ய தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் மற்றும் வேர்க்கடலை என ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களில் பயிரிட்டு வந்துள்ளோம். தற்போது, இந்த பயிர்கள் அனைத்தும் அறுவடை செய்ய தயார்நிலையில் உள்ளன. இதனை காட்டுப்பன்றிகள் நாள்தோறும் வயல்வெளிகளில் புகுந்து நெற்பயிர்,  வேர்க்கடலைகளையும் நாசம் செய்கின்றன.

இதனால், எதிர்பார்த்த மகசூல் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பல்வேறு விவசாய வங்கிகளில் கடன்களை பெற்று, விவசாயம் செய்து உள்ள நிலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்ற அச்சத்தில் நாள்தோறும் தவித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை வனத்துறையிடம் தெரிவித்தும், விவசாயிகளுக்கான தகுந்த ஆலோசனைகள் வழங்குவதில் மெத்தனம் காட்டுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக வனத்துறை காட்டு பன்றிகளை கட்டுக்குள் கொண்டுவர என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories: