திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஆண்டியப்பனூர் அணையில் ₹5 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருப்பத்தூர் வட்டம் ஆண்டியப்பனூர் அணையில் ₹4.67 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்ற பூங்கா, சிறுவர் பூங்கா, சிற்றுண்டி உணவகம், சுற்றுலா பயணிகள் அமருமிடம், 9 வகையான வன விலங்குகளின் உருவ சிலைகள், நீரூற்று அமைக்கும் பணிகள் மற்றும் ₹1.30 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணி, அலுவலக அறை, கழிவறைகள் ஆகிய கட்டுமான பணிகள் என மொத்தம் ₹5 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, தற்போது அணையின் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அணையின் முழுகொள்ளளவு 26 அடிகள் ஆகும். தற்போது 90 சதவீதம் வளர்ச்சி திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், ஆண்டியப்பனூர் ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் சக்தி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவிவெங்கடேசன், விவசாய சங்கத் தலைவர் மார்கண்டன், உள்ளாட்சி பிரிதிநிதகள், அங்கன்வாடி பணியாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: