ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி-மேம்பாலம் அமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் கிராமத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், அரசு மேல்நிலைப் பள்ளி ஆனது தாமலேரி முத்தூர் கிராமத்தில் இருந்து நாட்றம்பள்ளி செல்லும் பிரதான சாலையின் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியை கடந்து அமைந்துள்ளது.

இதனால் இங்குள்ள பள்ளி மாணவர்கள் ரயில்வே கேட் கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இதேபோன்று பல்வேறு பணியின் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.  ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் இங்குள்ள ரயில்வே கேட் பாதையை கடந்து செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு சில நேரங்களில் காலதாமதத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட ரயில்வே கேட்டை கடந்து செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: