சென்னை: என்.எல்.சி. விவகாரத்தில் தேவைக்கு அதிகமாக விவசாயிகளின் நிலத்தை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மான கொண்டுவரப்பட்டது. என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்:
தமிழ்நாட்டின் மின் தேவையை பெருமளவில் என்.எல்.சி. பூர்த்தி செய்கிறது. அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய நில எடுப்பு அவசியமாக உள்ளது. என்எல்சி நிறுவன விவகாரங்களை கண்காணிக்க முதலமைச்சர் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். நிலம் கொடுப்போருக்கு என்.எல்.சி. வேலைகளில் முன்னுரிமை அடிப்படையில், தேர்வில் 20 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. 594 நில உரிமையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகையை வழங்குவது, மறுவாழ்வுக்கான பலன்களை அளிப்பது, நிரந்தர வேலை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதிக மின் உற்பத்தி தேவை என்பதால் நில எடுப்பு என்பது அவசியமாகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்வுகளில் 20 மதிப்பெண் கூடுதலாக வழங்க என்எல்சி ஒப்புக் கொண்டுள்ளது. 1,071 பணியிடங்களில் நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க என்.எல்.சி. உறுதி அளித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து தேவைக்கு அதிகமான நிலத்தை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது என்று கூறினார்.