சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் தொடங்கியது. அப்போது அந்தியூரில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்க அரசு முன்வருமா என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; அந்தியூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி இரண்டும் உள்ளது.
இதில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1150. ஆனால் இந்த ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 438. இவ்வளவு காலியிடங்கள் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கட்டும். அதன்பின்னர் எதிர்கால தேவைக்கு ஏற்ப அப்போது முடிவு எடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3184 இடங்கள் காலியாக உள்ளது. தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. என கூறினார்.