ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பின் புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பின் தடை சட்டம் கொண்டு வரப்படுமென அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் புதுச்சேரி, தமிழக இளைஞர்கள் பல லட்சங்களை இழந்து  தற்கொலை செய்து கொள்ளும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தயாரித்து, தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே,  புதுச்சேரியில் தடை செய்ய வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இதேபோல் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ‘பந்தயம் வைத்தல், சூதாடுதல், இந்திய அரசின் 7ம் இணைப்பு பட்டியலின், 2ம் துணை பட்டியலில் மாநில பிரிவில் 34வது பதிவில் உள்ளது. தலைமை செயலர் ஆலோசனையின் ேபரில், இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்ட முன்வரைவு சட்டத்துறையால் தயாரிக்கப்பட்டு உள்துறை  வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவு அமைச்சரவை ஒப்புதல்  பெறப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் எந்த ஒரு தண்டனை சட்டத்துக்கும் ஒன்றிய அரசின் இசைவை பெற வேண்டும். அதன்படி இந்த சட்ட முன்வரைவுக்கு ஒன்றிய அரசின் அனுமதி பெற்றப்பட்டவுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டம் புதுச்சேரி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: