வாட்டர் கேன்களை மரத்தில் கட்டி வைத்து பறவைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் மாணவர்கள்

தர்மபுரி: தர்மபுரி அருகே கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, பள்ளி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை மரத்தில் கட்டி உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாடி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து பீனிக்ஸ் என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினர். பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் இக்குழுவில் உள்ளனர். இந்த பீனிக்ஸ் அமைப்பின் மூலம் பூகானஅள்ளி கிராமத்தில் உள்ள ஏரி, அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த குழுவில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மரக்கன்றுகளுக்கு  கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், கிராமத்தில் உள்ள ஏரியில் பாழடைந்த கிணற்றை பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரி சுத்தப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஏரிக்கரையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை, அந்த கிணற்றிலிருந்து மோட்டார் வைத்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு வருகின்றனர்.

பூகானஅள்ளி ஏரியில் மா, பலா, கொய்யா, நாவல் போன்ற பலவகை மரங்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பறவைகள் இந்த மரங்களில் வந்து அமர்ந்து பழங்களை உண்டு மகிழ்கின்றன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பீனிக்ஸ் அமைப்பினர், இங்கு வரும் பறவைகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பதற்காக வாட்டர் பாட்டில்களை இரண்டாக வெட்டி, அதை கம்பியால் மரத்தில் கட்டியுள்ளனர்.

இதில் மேல் பகுதியில் தானியங்களையும், கீழ் பகுதியில் தண்ணீரையும் ஊற்றி வருகின்றனர். பறவைகள் மரத்தில் அமரும்போது, தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டு, தண்ணீரையும் அருந்தி விட்டுச் செல்கின்றன. தொடர்ந்து மரக்கன்றுகளை பராமரித்து வரும் பீனிக்ஸ் குழுவினர், பறவைகளுக்காக உணவு மற்றும் தண்ணீரை தினமும் நிரப்பி வருகின்றனர்.

Related Stories: