தொடரும் போக்குவரத்து நெரிசல் சிதம்பரத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரத்தில் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை உடனடியாக சரிசெய்து பார்க்கிங் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் மற்றும் தில்லை காளியம்மன் கோயில், பிச்சாவரம் சுற்றுலா தளம், அண்ணாமலை பல்கலைகழகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக தலங்களும், சுற்றுலா மையங்களும் நிறைந்த ஒரு நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் சுற்றுலா மையத்துக்கு செல்வதற்கும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகமாக வருகிறது.

குறிப்பாக கீழ வீதி, மேல வீதி உள்ளிட்ட இரண்டு பகுதிகளிலும் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பயணிகள் வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவசர தேவைகளுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

அதேபோல் வடக்கு வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. குறிப்பாக வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கேயே சமைப்பதும், சமைத்த கழிவுகளை அருகிலே கொட்டிவிட்டு செல்வதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் அருகே உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. நகராட்சி மூலம் தினந்தோறும் காலை முதல் மாலை வரை இந்த கழிவுகளையும், குப்பைகளையும் தினந்தோறும் அகற்றி வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் இந்த தவறை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உண்டாகிறது. எனவே வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் நிற்பதற்கு தனியாக ஒரு பார்க்கிங் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என சிதம்பரம் நகர பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை

இதுகுறித்து சிதம்பரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் முத்துக்குமரன் தெரிவித்ததாவது, சிதம்பரம் நகர பகுதியில் பள்ளிகளுக்கு டூவீலர் மற்றும் மிதிவண்டிகளில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலால் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. எங்களைப்போல் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை கீழவீதி பகுதியில் ஆங்காங்கே சாலை அருகே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. எனவே இவற்றிற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

நிரந்தர தீர்வு காண வேண்டும்

இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர் ரவி தெரிவித்ததாவது, சிதம்பரம் நகரை பொறுத்தவரை சாலைகளில் வாகனங்களை போக்குவரத்து விதிகளை மீறாமல் ஒழுங்காக நிறுத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. அதேபோல் வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கோயில் பகுதிக்கு சென்று விடுகின்றனர். அப்போது தினசரி செல்லும் உள்ளூர் பேருந்துகள், வெளியூர் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இவற்றிற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: