வேலூர் மத்திய சிறை வளாகத்தில் பணிகள் தீவிரம்: மரச்செக்கு எண்ணெய், உணவகத்துடன் சிறை அங்காடி புதுப்பொலிவு பெறுகிறது

* விரைவில் திறக்க நடவடிக்கை

* சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் மரச்செக்கு எண்ணெய், சிறை உணவகம், அங்காடி புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறை, மாவட்ட சிறைகள் உட்பட 136 சிறைகள் உள்ளன. இங்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். குற்றங்கள் செய்து சிறைக்கு செல்லும் கைதிகள், தண்டனை காலம் முடிந்து திரும்பும் போது, சுயத்தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சிறைக்குள் பல்வேறு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறைக்குள் கைதிகள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் சிறை நிர்வாகம் ஏற்படுத்தி தருகிறது.

வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நன்னடத்தை கைதிகள் மூலம் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு சிறை வளாகத்தில் 2 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு, அதில் விளைந்த காய்கறிகள் கைதிகளுக்கான உணவுக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதற்கான செலவினம் கணிசமாக குறைந்தது. இதனால் காய்கறி தோட்டம் 4 ஏக்கராக விரிவுப்படுத்தப்பட்டது. இதில் விளைந்த காய்கறிகள் சிறைச்சாலை தேவைக்குப்போக மீதமாகும் காய்கறிகள் சிறை பஜார் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. வேலூர் சிறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க ₹2.64 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

அதில் இருந்து வெளியேறும் நீரை கொண்டு விவசாயம் செய்து வந்தனர். வேலூர் மத்திய சிறையை சுற்றியுள்ள காலியிடங்களில் முள்ளங்கி, குச்சி கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய் குறுகிய கால பயிர்கள் பயிரிடப்பட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யும்போது, 20 கிலோ தக்காளி, 40 கிலோ கத்தரி, வெண்டை, கொத்தவரை சிறை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் கொய்யா, மாங்காய், நெல்லிக்காய் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், மூலிகை தோட்டம் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கைதிகள் சிறைக்கு வெளியே விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர், வேலூர் மத்திய சிறையில், நன்னடத்தை கைதிகளை கொண்டு விவசாயம் செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 15 ஏக்கரில் தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தவரை, முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்பட்டது. ‘

மேலும், மரச்செக்கு எண்ணெய் தயாரிக்க சிறைத்துறை அனுமதி கோரி கடிதம் எழுதி உள்ளனர். சிறை அங்காடியில் புழல் சிறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை விற்கப்படுகிறது. சிறைக்கு எதிரே உள்ள உணவகத்தை புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் வேலூர் மத்திய சிறை சார்பில் சிறை அங்காவடி புதுப்பொலிவு பெறும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகளின் மனமாற்றத்திற்காக புத்தகம் சேகரிப்பு: சிறைகளில் உள்ள கைதிகளின் மன மாற்றத்திற்காகவும், சிறைக்குள் நூலகம் அமைக்கும் முயற்சிகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற அரங்கம் அமைத்து கைதிகளின் நூலகம் அமைக்க புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் புத்தகம் சேகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்தார்.

கைதிகளுக்கு கணினி பயிற்சி வழங்க நடவடிக்கை: தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கணிப்பொறி பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிறைகளிலும் 30 கணினி கொண்ட கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும். தொண்டு நிறுவனங்களின் மூலம் கணினி பயிற்சியாளர்கள் கொண்டு சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற சிறைவாசிகள் சிறையில் இருந்து வெளியில் சென்று சுயமாக கணினி மையம் தொடங்க அவர்களுக்கு கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

₹6.5 லட்சத்தில் மரச்செக்கு இயந்திரம்

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைகண்ணன், கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் ஆகியோரின் அறிவுரைப்படி வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயம், மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மத்திய சிறையில் ₹6.5 லட்சம் மதிப்பில் மரச்செக்கு இயந்திரம் வாங்குவதற்கு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வேலூர் மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் எண்ணெய் விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக புழல் சிறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சிறை உணவகத்தில் காலை, மதிய நேரத்தில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறை உணவகம் பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு

வருகிறது’ என்றனர்.

Related Stories: