பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேர்த்தியாக தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்: கலைநயத்துடன் கண்களை கவர்கின்றன

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக் கடன் செலுத்த மண் பொம்மைகளை நேர்த்தியாக தயார் செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா வருகிற ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் மூன்றாம் தேதி அக்னி சட்டி திருவிழாவும் நான்காம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

திருமணம், குழந்தை வரம், வீடு உள்ளிட்ட தங்கள் தேவைகளையும் கைகள் கால்களில் ஏற்படும் உடல்நலக் குறைவு சரியாதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை மண் பொம்மைகளாக வாங்கி நேர்த்திக் கடன் செலுத்துவது பக்தர்களின் வழக்கம். இதற்காக மண் பொம்மைகள் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆண் உருவம், பெண் உருவம், குடும்ப உருவ பொம்மைகள், ஜோடி பொம்மைகள், தவழும் குழந்தைகள் பொம்மை, வீடு, கார் உள்ளிட்ட பொம்மைகள், விலங்குகளின் உருவ பொம்மைகள், ஆயிரம் கண் பானை, தீச்சட்டி உள்ளிட்ட பொம்மைகள் தயாராகி வருகின்றன. மல்லாங்கிணறு, அழகாபுரி, புளியங்குளம், மைட்டான்பட்டி, வெள்ளாகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண், பெண் உருவம், தவழும் குழந்தை உள்ளிட்ட பொம்மைகள் 110 ரூபாய்க்கும், வீடு, கார், தீச்சட்டி 150 ரூபாய்க்கும் ஆயிரம் கண் பானை 165, ஆண் பெண் ஜோடி பொம்மை 250 ரூபாய்க்கும், குடும்ப பொம்மை 350 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன. இது குறித்து பொம்மை தயாரிப்பாளர் நாகராஜன் கூறுகையில், வண்டல் மண், களிமண், மணல், செம்மண், சவடுமண் ஆகிய ஐந்து வகையான மண்ணை கொண்டு இந்த பொம்மைகளை செய்து வருகிறோம். குழந்தை வரம், திருமணம், வீடு கட்டுதல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட அவரவர் நேர்த்திக்கடன்களுக்கு ஏற்ப அனைத்து வகை மண் பொம்மைகளையும் செய்து விற்பனை செய்து வருகிறோம். பெயிண்ட், மணல், வைக்கோல் எரிபொருள் உள்ளிட்ட பொம்மை செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை அனைத்தும் இரு மடங்கு உயர்ந்து விட்டது.

எங்களுக்கு தரை வாடகை அதிகமாக உள்ளது. பத்து ரூபாய் தான் கூலி எங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் இதில் உழைத்து வருவதால் இவ்வாறு தர இயலுகிறது. இருப்பினும் அம்மனுக்கான நேர்த்திக்கடன் என்பதால் நாங்கள் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு பொம்மைக்கு 10 ரூபாய் மட்டுமே உயர்த்தி உள்ளோம். முன்பு கண்மாயில் மணல் எடுத்து இதை செய்து வந்தோம். தற்பொழுது மணல் அள்ள அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இதனால் மண்ணை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மணல் அள்ள அனுமதி அளிக்கும் நடைமுறைகளை எங்களைப் போன்றோருக்காக எளிமைப்படுத்தினால் உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Related Stories: