வேம்பாரில் அரைகுறையாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தால் அடிக்கடி சேதமடையும் படகுகள்: மீனவர்கள் அவதி

குளத்தூர், மார்ச் 23: வேம்பாரில் அரைகுறையாக அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தால் அடிக்கடி படகுகள் சேதமடைகின்றன. இதனால் அவதிக்குள்ளாகும் மீனவர்கள், தூண்டில் பாலத்தை முறையாக அமைக்க வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான வேம்பார் மற்றும் அதை சுற்றி 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீன்பிடித் தொழிலே பிரதான தொழிலாக செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் 200க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேம்பார் கடல் கரை அரிப்பு மற்றும் கடல் கொந்தளிப்பினால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர். இதனால் கடல் அரிப்பு, கடல் கொந்தளிப்பினால் மீனவர்களின் படகுகள் அடிக்கடி சேதமடைவது வாடிக்கையாக இருந்தவண்ணம் உள்ளது. இதையடுத்து படகுகளை பாதுகாப்பதோடு கரையோரத்தில் குடியிருக்கும் மீனவர்களையும் பாதுகாக்க கரையோரத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் நீண்ட கால போராட்டத்தையடுத்து வேம்பார் கடல் கரை பகுதியில் ரூ.14.20 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு கல்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வேம்பார் கரையில் இருந்து கடலுக்குள் மொத்தமாக சுமார் 870 மீட்டர் தொலைவிற்கு பெரிய கருங்கற்களை கொண்டு பாலம் அமைக்கும் பணி நடந்தது. 2015ல் தொடங்கப்பட்ட பாலப் பணிகள் 2017ம் ஆண்டு நிறைவுற்றது. மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்ட பாலங்களில் 1வது பாலம் 600 மீட்டர் தொலைவிலும், 2வது பாலம் 170 மீட்டர் தொலைவிலும், 3வது பாலம் வேம்பார் அந்தோனியார் ஆலயத்தின் மேற்கு பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கும் அமைக்கப்பட்டது. இதன் அருகிலேயே மீன் பிடி இறங்கு தளம் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலங்கள் அமைக்கும் பொழுது அதிகாரிகளிடம் மீனவர்கள் பாலங்கள் கடல் அரிப்பை தடுக்க சரியான இடங்களில் அமைக்கப்படவில்லை மாற்று இடங்களில் முறையாக அமைத்து தாருங்கள் என கோரிக்கை விடுத்தும் அதையும் மீறி தூண்டில் வளைவு பாலங்களை கடமைக்கு அமைத்துவிட்டு சென்றனர்.

இப்பாலங்களால் கிழக்கு பகுதியில் ஓரளவு கடல் அரிப்பு குறைந்த போதிலும் மேற்கு பகுதியில் வழக்கத்தை விட கடல் அரிப்பு அதிகரித்துள்ளதுடன் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கரையோரம் அடித்து சேதத்துக்குள்ளாகிறது.

மேலும் அடிக்கடி மீனவர்களின் படகுகள் இது போன்று கடல் சீற்றத்திற்கும், கடல் அரிப்பினாலும் படகுகள் சேதமடைவது மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதில் பெரும் சேதத்தை உருவாக்குவதுடன் மீனவர்கள் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது. கடந்த பல வருடங்களாக வேம்பார் கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றம், கடல் அரிப்பினால் மீனவர்கள் படகுகள் மற்றும் வீடுகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க இப்பகுதி மீனவர்கள் அனைவரும் கடல் பகுதியில் சீற்றத்தை தணிக்க தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர அரசுக்கு பல மனுக்கள் மூலம் கோரிக்கை விடுத்தோம்.

பாதிப்புகளை தவிர்க்க பாலம் அமைக்க கேட்டால், அதிகாரிகளோ மேலும் அதிகமான பாதிப்புக்குள்ளாகும்படி தூண்டில் வளைவு பாலத்தை அமைத்து சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகள் கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளது. மேலும் தூண்டில் வளைவு பாலம் மூன்று பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடுப்பகுதியில் உள்ள தூண்டில் வளைவு பாலத்தை மேலும் நீட்டித்து மேற்கு புறமாக வளைத்து அமைக்க வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: