கோத்தகிரி அருகே சோதனைச்சாவடியில் காவலர்களை 2 மணி நேரம் சிறைவைத்த காட்டு யானை: வீடியோ வைரல்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர்களை நள்ளிரவில் உலா வந்த காட்டு யானை 2 மணி நேரம் சிறை வைத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாதமாக ஆண் காட்டு யானை ஒன்று உலா வருகிறது. இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்கி வருகிறது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை போலீஸ் சோதனைச்சாவடியில் காவலர்கள் இரவு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, காவலர்கள் தங்கி உள்ள சோதனைச்சாவடி அருகே வந்தது. இதனால், அச்சமடைந்த காவலர்கள் சோதனைச்சாவடி கட்டிடத்திற்குள்ளேயே முடங்கினர். அவர்கள் கட்டிடத்துக்குள் இருந்த வெளியே வர முடியாதபடி யானை சிறைவைத்தது.

யானைக்கு பயந்து சுமார் 2 மணி நேரமாக கட்டிடத்திற்குள் இருந்து காவலர்கள் வெளியே வரவில்லை. பின்னர் அந்த காட்டு யானை யாருக்கும் எந்த இடையூறு செய்யாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்த காவலர்கள் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவலர்களை யானை சிறைவைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Related Stories: