அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுச் செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் நிற்க தயார்: ஐகோர்ட்டில் 7 மணி நேரம் கடும் வாதம்; தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை: ‘‘அதிமுக பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காகவே, முக்கிய பதவி வகித்த மனுதாரர் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு நீக்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும், பொதுக்குழுவின் குரலை ஒடுக்கும் வகையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் சுமார் 7 மணி நேரம் வாக்கு வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதத்த கேட்ட ஐகோர்ட், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம், வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் மற்றும் இளம்பாரதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டதாவது: 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கட்சியில் 1977 முதல் அடிப்படை உறுப்பினராக இருந்துவருகிறார். கட்சியின் பொருளாளராகவும் இருந்துள்ளார். நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2017ல் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது. இந்த நிலையில் எந்த தேவையும் இல்லாமல், பொதுசெயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவியை விதிகளுக்கு முரணாக நீக்கம் செய்துள்ளனர். இதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இந்நிலையில், பொதுச்செயலாளரை தன்னிச்சையாக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.எந்த அடிப்படை உறுப்பினரும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், எனக்கு முழு ஆதரவு உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். பொதுச்செயலாளர் பதவி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே வகிக்க கூடிய வகையில் விதிகளில் உள்ளது. தேர்தல் ஆணையம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையே அங்கீகரித்துள்ளது. இவர்களுக்கு மட்டுமே கட்சியில் அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை பொதுக்குழுதான் தேர்வு செய்ய வேண்டும்.

பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய முடியும். பொதுச்செயலாளர் பதவி தேர்வு குறித்த விதியை 2017 பொதுக்குழுவில் திருத்தவில்லை. இதற்கு முரணாக பொதுச்செயலாளரை தேர்வு செய்வது கட்சியின் அடிப்படை கட்டமைப்பையே சிதைத்துவிடும். பொதுக்குழு உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணைப்பாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நிலையில், பொதுக்குழுவில் அந்த பதவிகளை ரத்து செய்ய முடியாது. பொதுக்குழு, செயற்குழுவில் எடுக்கப்படும் தீர்மானத்தையும் திட்டங்களையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அமல்படுத்தலாம் என்று கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் முழுவதும் அமல்படுத்தப்படவேண்டும்.   

ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன் வைக்கப்படாத நிலையில் இரட்டை தலைமை காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக உச்ச நீதிமன்றமும் கூறவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு, காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும். பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெறுவதற்காகவே, முக்கிய பதவி வகித்த மனுதாரர் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு நீக்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரல் எதுவும் வைக்கவில்லை.

இந்நிலையில் எப்படி பொதுச்செயலாளர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்ற முடியும். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து, சிறப்பு தீர்மானத்தை யார் கொண்டு வந்தது என்று கூறவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கவில்லை. அவருக்கு நோட்டீசும் தரவில்லை. இந்த தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்வது குறித்த அஜண்டா எதுவும் இல்லை. மனுதாரர் ஓ.பன்னீர்செல்லவம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். எதிர்கட்சி துணைத்தலைவராகவுள்ளார்.

எனவே, இது உட்கட்சி விவகாரம் மட்டமல்ல. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூற முடியாது. எனவே அந்த வாதத்தை நிராகரிக்க வேண்டும். பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் எனக் கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்துக்கு விரோதமானது. கட்சியில் இருந்து நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டால், பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட மனுதாரர் தயாராக உள்ளார். உறுப்பினர்கள் யார் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று முடிவெடுத்து கொள்ளட்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் படி, மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றார்.

வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, எம்.எல்.ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னை, முறையாக விளக்கம் கூட கேட்காமல் நீக்கியுள்ளனர். பொது செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டதால், நீக்கம் தொடர்பாக அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

எந்த காரணத்துக்காகவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது. காலாவதியாகிவிட்டதாக எவரும் கூறமுடியாது. இரு பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக கூறினால், முதலில் அவற்றை நிரப்பிய பிறகே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும். ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பான்மையினர் விரும்பினாலும் அதை ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே முடிவெடுக்க முடியும் என்றார்.ஜேசிடி பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, கட்சியில் இருந்து நீக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை.தீர்மானங்களை நிறைவேற்றி 8 மாதங்களுக்கு பின், நீதிமன்றத்தை அணுகியதாக கூறியது தவறு. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த 15 நாட்களில் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் தாமதம் ஏதுமில்லை என்றார். இதற்கு பதிலளித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, ஒ.பன்னீர்செல்வம் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார்.

அதிலிருந்து எங்கள் தரப்பினரை நீக்கி, புதிதாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொது செயலாளர் என்று உலகத்துக்கே தெரியும். நீக்க நடவடிக்கையால் யாருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஒ.பன்னீர்செல்வம் தனது சொந்த சகோதரரையே எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து  நீக்கியுள்ளார். உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் உள்ளது என்றார்.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பெரும்பான்மையினர் கூடி, இனி இவை தான் விதிகள் என்று முடிவு செய்தால் அது தான் விதிகளாக மாறுகின்றன. 52 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் 47 ஆண்டுகள் பொது செயலாளர் பதவி தான் இருந்துள்ளது. 5 ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தன. மீண்டும் பொது செயலாளர் பதவி கொண்டு வரப்பட்ட நிலையில், அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய கால அவகாசம் ஏற்படும் என்பதால் இடைக்கால பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொது செயலாளர் தேர்தலுக்கான பாதை தெளிவாகியுள்ளது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு கட்சி முடிவு செய்த இந்த நிபந்தனைகளை நீதிமன்றம் சட்டவிரோதம் என்று கூற முடியாது. ஒ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகியான பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை.

எனவே, கட்சியை விட்டு நீக்க ஒரே மாதிரியான நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று இருதரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விதிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகள் படி, மூன்று பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.

Related Stories: