மண் பானைகளை உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்: திருச்சியில் பரபரப்பு

திருச்சி: திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமையேற்று சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், உலக தண்ணீர் தினத்தின் நோக்கமே, தண்ணீரை சேமிப்பது தண்ணீரை விரயம் செய்யாமல் பாதுகாப்பதே. ஆனால் இந்த வருடம் மட்டும் காவிரியில் இருந்து 500 டி.எம்.சி. தண்ணீர் வெள்ளமாக கடலில் கலந்தது. கோதாவரியில் 5000 டி.எம்.சி. தண்ணீரும், கிருஷ்ணா நதியில் 2000 டி.எம்.சி. தண்ணீரும் வெள்ளமாக கலந்து வீணாகிறது.

இப்படி மழைநீர் வீணாக கடலில் கலக்காமல் இருக்க நீர்வழிச்சாலை அமைப்பதுடன் தண்ணீரை மேட்டூரில் இருந்து வடபுறம் கால்வாய் வெட்டி சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் அரியலூர் வழியாக அய்யாறு, உப்பாற்றுடனும், தளுகை ஆற்றுடனும் இணைக்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையில் பெய்யும் மழை நீரை கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம், வெள்ளோடு, திண்டுக்கல் வழியாக ஆலடியாறு அணையில் சேகரித்து துளையிட்டு கீழ்கூடலூர், எரியோடு, கடவூர் வழியாக பொன்னணி ஆறு அணையுடன் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, மாவட்டத்தில் உள்ள 2 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார். போராட்டத்தில் காலி மண் பானைகளுடன் பங்கேற்ற விவசாயிகள், பின்னர் பானைகளை தரையில் போட்டு உடைத்து கோஷம் எழுப்பினர். இதில் பங்கேற்ற சிலர் மேல் சட்டையின்றி அரை நிர்வாண கோலத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: