குதிரை பந்தயம் அடுத்த மாதம் துவங்குகிறது பல்வேறு மாநிலங்களில் இருந்து ‘ரேஸ்’ குதிரைகள் ஊட்டி வந்தன

ஊட்டி : சுற்றுலா நகரமான ஊட்டியில் ஆண்டு தோறும் கோடை சீசனை முன்னிட்டு  ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம்  வரை ஊட்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு  வருகிறது.  பல்வேறு போட்டிகளின் அடிப்படையில் நடக்கும் இந்த குதிரை  பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக பாம்பே, புனா, சென்னை, பெங்களூர்  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட குதிரைகள்  ஊட்டிக்கு அழைத்து வரப்படும்.

இரு மாதங்கள் நடக்கும் இந்த குதிரை பந்தயத்தை  சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், இந்த குதிரை  பந்தயத்தை காணவும் மற்றும் விளையாடவும் பல்வேறு வெளி மாநிலங்களை  சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். அதேபோல், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த  பலரும் இதனை காணச் செல்வது வழக்கம். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி  குதிரை பந்தயம் துவக்கப்படும். ஆனால், இம்முறை சற்று முன்னதாக ஏப்ரல் மாதம்  1ம் தேதி முதல் துவக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 1ம்  தேதி  குதிரை பந்தயம் துவங்கவுள்ள நிலையில்  ஓடுதளம் முழுவதும் சீரமைக்கும் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து  வருகிறது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குதிரைகளும் வந்துள்ளன. பந்தய  குதிரைகளுக்கு தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள காலநிலைக்கு ஏற்றவாறு  பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: