அரசு நிலங்களை மீட்ககோரி விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அரசு நிலங்களை மீட்க கோரி  விவசாய சங்கத்தினர் வட்டாட்சியரை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில்  தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட  அரசு நிலத்தை மீட்டு தர கோரி பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியரை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், ராஜேந்திரன், சூரிய பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், லோகநாதன், குப்பன், வெங்கடாதிரி, செல்வராணி, கருணாமூர்த்தி, கோபால், மகேந்திரன், சுந்தரம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில விவசாய சங்க செயலாளர் துளசி நாராயணன் கலந்து கொண்டு பேசியதாவது: ஈகுவார்பாளையம் ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, 370 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்த நிலங்களில் குளம், குட்டை, ஏரி, மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு அரசு நிலங்களை முக்கிய பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இங்கு,  கடை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டிடங்கள் கட்டும் செயல்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஈகுவார்பாளையம் ஊராட்சியில், கடந்த திமுக ஆட்சியில் குளம் வெட்டப்பட்ட இடத்தை, தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தார்.

பொக்லைன் மூலம் சீர்படுத்தி பணி மேற்கொள்ள முயன்றார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டதற்கு அவர்களின் மீதே புகார்கள் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க நிர்வாகிகள் வட்டாட்சியரை பலமுறை சந்தித்து, மேற்கண்ட அனைத்து அரசு நிலங்களை மீட்க கோரி மனு கொடுத்தனர்.  எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இதனைக் கண்டித்து, அரசு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்  பேசினார்.  இதில் விவசாய சங்கத்தின் வட்ட செயலாளர் ரவி நன்றி உரையாற்றினார். இந்த கண்டனம் ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: