வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 30 சிறப்பு குழந்தைகள் சுற்றுலா: திருவள்ளூர் கலெக்டர் அனுப்பி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி மற்றும் காது கேளாதோருக்கான ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாக ஒருநாள் சுற்றுலா சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து ஹோப் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் உள்ள 15 சிறப்பு குழந்தைகள் மற்றும் லைப் எய்டு சென்டர் காது கேளாதோருக்கான ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் உள்ள 15 சிறப்பு குழந்தைகள் என மொத்தம் 30 சிறப்பு குழந்தைகளுடன் பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் 7 நபர்களும், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக வண்டலூர் உயிரியல் பூங்கா சென்று வர அனுமதிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பாக தயார் செய்யப்பட்ட வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, அச்சிறப்பு குழந்தைகளுடன் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடி, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று வருவதற்கு வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பாபு, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: