ரூ.20 ஆயிரம்தான் தருவோம்... ஒப்பந்தத்தில் கையெழுத்து போடு... தர்மபுரி இன்ஜினியருக்கு மலேசியாவில் சித்ரவதை: நாடு திரும்ப இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்காததால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான வீடியோ

தர்மபுரி: மலேசியாவில் சித்ரவதை செய்யப்படும் தர்மபுரி இன்ஜினியர், நாடு திரும்ப உதவுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி ஏ.சப்பாணிபட்டியை சேர்ந்தவர் துளசி (60). இவர் தனது இளைய மகன் தினேஷ்குமார் (32) மற்றும் உறவினர் நடராஜன் ஆகியோருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது 2வது மகன் மாதேஷ் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தார். மாத சம்பளம் ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நிறுவனமே விசா, விமான டிக்கெட்டுகளை அனுப்பி வைத்ததால், மாதேஷ் டிசம்பர் மாதம் 7ம் தேதி விமானம் மூலம் மலேசியா சென்று பணியில் சேர்ந்தார். பணிக்கு சேர்ந்த 20 நாட்களிலேயே வேலை சரியாக செய்யவில்லை என டார்ச்சர் செய்ததால் அங்கிருந்து தப்பி இந்திய தூதகரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் தன்னை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்தும் இதுவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதல்வர் தலையிட்டு மலேசியாவில் இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள எனது மகனை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் உள்ள மாதேஷ் வாட்ஸ்அப் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து தனது உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார்.

அதில், நான் 3 மாதங்களுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு வந்தேன். இங்கு எனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டனர். ரூ.1 லட்சம் சம்பளம் தருவதாக கூறி ரூ.20 ஆயிரம் சம்பளம் மட்டுமே தரமுடியும் என ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச் சொன்னார்கள். ஆனால் நான் கையெழுத்து போட மறுத்ததால், அந்த நிறுவனத்தினர் என்னை மிரட்டி, அடித்து துன்புறுத்தினர். நான் மலேசியாவை விட்டு போக முடியாது என கூறினர். அதனால் நான் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். எனது குடும்பத்துடன் சேர்த்து வைக்க  முதல்வர் உதவ வேண்டும். இவ்வாறு வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related Stories: