திறந்தவெளி சிறைச்சாலையில் விவசாயம் தீவிரம் கைதிகள் விளைவித்த கரும்பில் சர்க்கரை உற்பத்தி-தர்பூசணியும் விற்பனைக்கு வந்தது

மதுரை : மத்திய திறந்தவெளிச் சிறைச்சாலையில் கைதிகள் செய்த விவசாயத்தில் விளைந்த கரும்பில் இருந்து ஒரு டன் சர்க்கரையை உற்பத்தி செய்து அசத்திய கைதிகளை அதிகாரிகள் பாராட்டினர். தர்பூசணியும் அமோகமாக விளைந்து சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மதுரை மத்திய சிறை நிர்வாகமானது, கைதிகளின் வாழ்வாதாரம் காக்கவும், அவர்கள் குற்றச்செயல்களை மறந்து, திருந்தி உழைத்து வாழ்வதற்கான பல்வேறு வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் காரைக்குடியில் 84 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்தவெளி சிறைச்சாலை அமைந்துள்ளது.

இங்கு தண்டனை கைதிகள் 100 பேரை கொண்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பில் தண்டனை கைதிகள் 84 ஏக்கரில் பல்வேறு விவசாய பணிகளை செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் மேற்பார்வையில் பசுமை காடுகளை உருவாக்கும் பணிகள் கடந்த 2020ம் ஆண்டு துவங்கப்பட்டது.

சிறைத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செம்மரம், இலுப்பை, ரோஸ், வேங்கை, உள்ளிட்ட 30 ஆயிரம் கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மரங்கள் வளர்ந்து பசுமை காடுகளாக உருவாகியுள்ளன. மேலும் உடனடி லாபம் தரும் வாழை, கரும்பு, தென்னை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற பல வகையான மரங்கள் தலா 5 ஏக்கரில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுபோக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் போன்ற பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சீசனுக்கு தகுந்தவாறு பல்வேறு பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால் தர்பூசணி பயிரிட்டு அதில் விளைந்த பழங்களை தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை அங்காடியில் சந்தைப்படுத்தியுள்ளனர்.

இதன்படி ஒரு கிலோ ரூ.15 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் இந்த பழத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதேபோல் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு, அதனை கைதிகளே வெட்டி, மேலூர் அருகே உள்ள ஆலையில் ஆட்டியெடுத்து நாட்டு சர்க்கரையாக்கி உள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் கைதிகள் விளைவித்த கரும்பில் இருந்து சுமார் ஒரு டன் நாட்டு சர்க்கரை கிடைத்துள்ளது.

இந்த சர்க்கரையை சிறை நிர்வாகம் விலை கொடுத்து வாங்கி, சிறை அங்காடிக்கே பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதேபோல் 5 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை விளைச்சல் ஏற்படுத்தி, அதில் வரும் பழங்களை கொண்டு மதுரை மத்திய சிறை கைதிகள் மூலம் ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திறந்த வெளிச் சிறைச்சாலையில் விளையும் ஒவ்வொரு பொருளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, அதில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதம் கைதிகளுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

* இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறைச்சாலைக்கு வரும் கைதிகளில் தண்டனை கைதிகளை கொண்டு பல்வேறு தொழில்களை மேற்கொண்டு அவற்றில் கிடைக்கும் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் விளைவிக்கும் விவசாய பொருட்கள் இயற்கை முறையில் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது. கைதிகள் வெளியில் வந்து விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவதால் அவர்கள் குற்றங்கள் செய்து விட்டு வந்ததை நினைக்காமல், குடும்பத்தில் ஒருவர் போல் திருந்தி புது மனிதர்களாக மாறிவிடுகின்றனர்.

தண்டனை கைதிகள் விடுதலையாக 7 வருடம் இருப்பதற்கு முன்னதாக இதுபோன்ற விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் சிறப்பாக பணியாற்றும் கைதிகள் நன்னடத்தை மூலம் ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே விடுதலையாக வாய்ப்புள்ளது. இப்படி பலர் விடுதலையாமன பின்னர் வெளியில் வந்து சிறையில் செய்த தொழில்களில் ஒன்றை தேர்வு செய்கிறார்கள். இதன்படி விவசாயம், இட்லி கடை, டீக்கடை, மர வேலைகள், பேவர் பிளாக் கற்கள் தயாரிப்பு, நர்சரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, குற்றச் செயல்களை மறந்து, தங்கள் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர்’’ என்றனர்.

* விடுதலையான கைதி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நான் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தேன். சிறை அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையில் நான் என்னை திருத்திக் கொண்டு, விவசாய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். இதன் மூலம் எனக்கு கிடைத்த சம்பளத்தினை பயன்படுத்தி எனது குடும்பத்திற்கும், என்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் நான் உதவியாக இருந்து வந்தேன்.

தற்போது, நன்னடைத்த அடிப்படையில் விடுதலையான நான் எனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எனது குடும்பத்தினரும் எனக்கு உதவியாக உள்ளனர். தற்போதும் சிறைத்துறை அதிகாரிகள் சிலர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். சிறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் என்னை போல் பல கைதிகள் முழுமையாக மாறியுள்ளனர் என்றார்.

Related Stories: