செயல்படாமல் கிடந்ததால் மேயர் நடவடிக்கை பொது மருத்துவமனையாக மாறும் ஆடுவதை கூடம்-மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் தீவிரம்

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு செயல்படாமல் இருந்த ஆடுவதை கட்டிடத்தை இடித்து அகற்றி பொது மருத்துவமனை அமைக்க மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில் நேற்று பூமி பூஜை நடைபெற்றது.சிவகாசி மாநகராட்சி அம்மன்கோவில்பட்டி தெற்கு தெருவில் பழைய ஆடுவதை கட்டிடம் உள்ளது. இங்கு புது ரோட்டில் செயல்பட்டு வந்த இறைச்சி மார்க்கெட் வியாபாரிகள் ஆடுகளை வதை செய்து இறைச்சி விற்பனை செய்தனர்.

சிவகாசி நகர் விரிவடைந்ததால் புதிய இறைச்சி கடைகள் அதிகரித்தன. இதனிடையே கடந்த 2000ம் ஆண்டில் நகர் பகுதியில் இறைச்சி விற்பனை செய்வோர் ஆடு வதை கூடத்தில் ஆடுகளை கட்டாயம் வதை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்போது சிவகாசி அம்மன்கோவில் பட்டி தெற்கு தெருவில் உள்ள ஆடு வதை கட்டிடம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் அதிகாரிகள் கடுமை காட்டாததால் ஆடுகளை மீண்டும் இறைச்சி கடை அருகிலேயே வதை செய்து விற்க தொடங்கினர். இதனால் ஆடு வதை கட்டிடம் செயல்பாடின்றி கிடந்தது.

இந்நிலையில் 2006ம் ஆண்டு விஸ்வநத்தம் சாலையில் புதிய நவீன இறைச்சி மார்க்கெட் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. மாநகராட்சி பகுதியில் வேறு எங்கும் இறைச்சி விற்பனை செய்ய கூடாது எனவும், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இறைச்சி மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அப்போது உத்தரவிடப்பட்டது. ஆனால் விஸ்வநத்தம் சாலை தூரமாக இருப்பதாக கூறி இறைச்சி வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து வந்தனர். சிவகாசி பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்ட ஆடு வதை கூடமும், புதிதாக துவங்கப்பட்ட இறைச்சி மார்க்கெட்டில் கட்டப்பட்ட ஆடுவதை கட்டிடமும் செயல்பாடின்றி கிடந்தன.

சிவகாசி அம்மன்கோவில் பட்டி தெற்கு தெருவில் உள்ள ஆடுவதை கட்டிடம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் மேயர் சங்கீதாஇன்பத்திடம் கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து செயல்படாமல் இருந்த ஆடு வதை கட்டிடத்தை இடித்து அகற்றி மருத்துவமனை அமைக்க மேயர் உத்தரவிட்டார். ஜேசிபி இயந்திரம் மூலம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இங்கு ரூ.25 லட்சம் மதிப்பில் பொதுமருத்துவமனை கட்டுவதற்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது.

மேயர் சங்கீதாஇன்பம், துணைமேயர் விக்னேஸ்பிரியா காளிராஜன் தலைமை வகித்தனர். மாநகராட்சி பொறியாளர் சாகுல்முகம்மது, உதவி பொறியாளர் அழகேஸ்வரி, மண்டல தலைவர் சேவுகன், மாமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர், ராஜேஷ் நிகழ்ச்சியில் கலந்து ெகாண்டனர். இதே போல் சிவகாசி மாநகராட்சி ஜானகியம்மாள் மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஆய்வு கூடம் அமைக்க நேற்று பூமி பூஜை நடத்தப்பட்டது. மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்ெகாள்வதில் மேயர் தீவிரம் காட்டி வருகிறார். சிவகாசி மாநகராட்சி கிழக்கு பகுதி மக்களுக்கு இம்மருத்துவமனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரூ.1.96 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள்

சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 13, 14வது வார்டு பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். திருத்தங்கல் பகுதியில் சாலை, குடிநீர், வாறுகால், அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை  விடுத்தனர். கலைமகள் பள்ளி சாலை, அதன் சுற்றுப்புற சாலை, முருகன் திரையரங்கம் பகுதி சாலைகள் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்பம் பொறுப்பேற்ற பின்னர் திருத்தங்கல் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் வளர்ச்சி பணிகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைமகள் பள்ளி சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருத்தங்கல் பகுதியில் ரூ.1.96 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: