பெரம்பலூர் அடுத்த பாடாலூர் பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பாடாலூர் : பாடாலூர் அருகே ஆலத்தூர் தாலுகா பகுதியில் 90 நாட்களில் அதிக பலன்தரும் சூரிய காந்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை, ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி செய்யலாம். அந்த வகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கிணற்று பாசன மூலம் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து காரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும், சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. சாகுபடி நிலங்களை 2 முதல் 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும்.தொழுஉரம் இட்டு மண் கட்டிகள் நன்கு உடையுமாறு உழவு செய்ய வேண்டும். சூரியகாந்தி விதைகளை நிலத்தில் உழுத பின் தகுந்த இடைவெளியில் குழிக்கு 2 விதைகள் வீதம் 3 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை விதை விதைக்க வேண்டும். உழவு, பாத்தி அமைக்க, விதை, நடவு என ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. சூரியகாந்தியை பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு, விதைகளை பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி சுத்தம் செய்து அதன்பிறகே விற்பனைக்கு தயார் செய்ய முடியும். இவ்வாறு சாகுபடி செய்யப்படும் சூரியகாந்தி விதைகள், திருச்சி மற்றும் பெருநகரங்களில் விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றால் 1 கிலோ ரூ.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் சூரியகாந்தியை சாகுபடி செய்வதன் மூலம், 90 நாட்களில் லாபம் பெற முடிகிறது என்றனர்.

Related Stories: