மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல்

*குவிண்டாலுக்கு ₹10,860 விலை நிர்ணயம்

மேட்டூர் : மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.இதுகுறித்து மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மாதவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மேச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவை கொப்பரை குவிண்டால் 1க்கு ₹10,860ம் கிலோ 1க்கு ₹108.60ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மேச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் தென்னை சாகுபடி செய்ததற்கான அசல் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்த விவசாயிகளிடம் மட்டுமே அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.

அரவை கொப்பரையில் அயல் பொருட்கள் 1 சதவிகிதத்திற்கு குறைவாகவும், பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சிலுகள் 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஈரப்பதமானது 6 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஆய்வக தர பரிசோதனை செய்து உரிய தரம் கொண்ட கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.கூடுதல் விவரங்களுக்கு மேச்சேரி  ஒழுகுமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை(73732 72950)தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: