நெல்லையில் பரபரப்பு பங்க்கில் டீசல் நிரப்பிய போது தனியார் பஸ்சில் ‘தீ’-பெரும் விபத்து தவிர்ப்பு

நெல்லை : நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்ப வந்த தனியார் பஸ்  திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீ  கட்டுப்படுத்தப்பட்டு பஸ் அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில்  உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று காலை தனியார் பயணிகள் பஸ் ஒன்று டீசல்  நிரப்புவதற்காக  வந்தது.  ஊழியர்கள் பஸ்சில் டீசல் நிரப்பிக்  கொண்டிருந்தபோது  பஸ் டேங்க் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை  வெளியேறி தீப்பற்றி எரிந்தது.

இதைக்கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பங்க் ஊழியர்கள், அங்கிருந்த அவசர கால தீயணைப்பு கருவிகள் மூலம்  பஸ்சில் பற்றிய தீயை ஓரளவு கட்டுப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து  பஸ் டிரைவர், பஸ்சை அங்கிருந்து உடனடியாக இயக்கி எதிர் திசையில்  சற்று தொலைவில் கொண்டு சென்று நிறுத்தினார்.

பின்னர் தொடர்ந்து பஸ்சில் பற்றிய  தீயை அணைத்தனர். டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது பஸ்சில் பற்றிய  தீ விபத்தை தொடர்ந்து பஸ் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதால் பெட்ரோல் பங்க்கில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்று  விசாரணை நடத்தினர். பின்னர் தீ விபத்தில் சிக்கிய தனியார் பஸ், அங்கிருந்து  பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காலை நேரத்தில் பெட்ரோல் பங்க்கில் நடந்த இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

பயணிகளின் உயிருடன் விளையாடும் பஸ்கள்

நெல்லையைப் பொருத்தவரை பெட்ரோல் பங்குகளில் பயணிகளுடன்  வந்து தனியார் பஸ்கள் பகல் நேரங்களில் டீசல் நிரப்புகின்றன. சந்திப்பில்  இருந்து பாளை மார்க்கெட் வழியாக செல்லும் போதும், சந்திப்பிற்கு திரும்பும் போதும் பல தனியார் பஸ்கள் திருவனந்தபுரம்  சாலையில் உள்ள பங்குகளில் பயணிகளுடன் பஸ்களை நிறுத்தி சாவகாசமாக டீசல்  நிரப்பிச் செல்கின்றன.

அவ்வாறு பயணிகளுடன் வந்து  டீசல் நிரப்பும் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு, பயணிகளின்  உயிருக்கு யார் உத்தரவாதம் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எனவே  தனியார் பஸ்கள் அதிகாலை பயணிகள் டிரிப் எடுப்பதற்கு முன்பாக அல்லது இரவு  டிரிப் முடிந்த பிறகு டீசல் நிரப்ப அனுமதிக்க வேண்டும். பங்குகளும் இந்த  விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுபோன்ற தனியார் பஸ்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: