சாலவாக்கம் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க ஆலோசனை கூட்டம்: விவசாயிகள், வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்க வேண்டும் என வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இயற்கை விவசாயிகளுக்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர்  தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியாசக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது, அவர்கள் கூறுகையில், ‘முதலில் சாலவாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து குழு அமைத்திட வேண்டும். இதேபோல், சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் குழுக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆயிரம் விவசாயிகளை கொண்டு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிட வேண்டும். அவ்வாறு துவங்கப்படும் நிறுவனத்தின் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளை விவசாயிகள் நேரடியாக எளிதில் பெற வழி வகுக்கும்.

மேலும், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைவதால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம்’ என்றனர். இதனைதொடர்ந்து, சாலவாக்கம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. இதில், சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய நெல் கொள்முதல் நிலையத்தினை விவசாயிகளின் பயன்பாட்டிக்காக திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: