மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், சின்னிவாக்கம் கிராமம், ரோட்டுத்தெரு என்ற முகவரியில் வசித்து வரும் அஜித் (மாற்றுத்திறனாளி) என்பவருக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனம் வழங்க மனு அளித்துள்ளதை தொடர்ந்து, மனுதாரருக்கு, ரூ.83,500 மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம், மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, மாற்றுத்திறனாளிக்கு, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளினை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: