வருவாய்மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவை ஆவணங்களை திரும்பப்பெற சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: வருவாய்மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஆவணங்களை திரும்பப்பெற சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக, இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஆவணங்கள் மூலம் அரசுக்கு சேரவேண்டிய வருவாயை ஈட்ட ஏதுவாக, முடங்கியுள்ள வசூல் பணியை முடுக்கி விட பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் இம்மாதம் 31ம் தேதி வரையில் ஒரு சிறப்பு முகாம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள சார்பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக, குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்தத்தவறி, அதன் காரணமாக நிலுவையில் உள்ள ஆவணங்களை, விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம். எனவே, அவ்வாறான கிரையதாரர்கள் தத்தம் ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரைத் தீர்வையினை, அசல் மற்றும் வட்டியுடன் செலுத்தி அசல் ஆவணத்தை பெற்றுக்கொள்ள ஏதுவாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சென்னை, முத்திரைத் தாள் - மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமினை சம்பந்தப்பட்ட கிரையதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: