செங்கரை கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் கழிப்பறை, குளியலறை கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

ஊத்துக்கோட்டை: செங்கரை கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை மற்றும் குளியலறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள்   கோரிக்கை வைத்துள்ளனர்.  

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.  அவர்களில் பக்தர்களில் பெண் பக்தர்களே அதிகம். அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பின்னர் அவர்கள் உடை மாற்ற மரம் மற்றும் செடிகளின் அருகில் மறைவாக சென்று மாற்றி வந்தனர்.  

இந்நிலையில் பெண்களுக்காக குளிக்கவும், உடை மாற்றவும் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும் பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி அப்போதைய கும்மிடிப்பூண்டி தொகுதி  எம்எல்ஏ சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ..4.75 லட்சம் செலவில் 2011-2012ம் ஆண்டு பெண்களுக்காக கழிப்பறை மற்றும் 10 குளியல் அறைகள் கொண்ட கட்டிடம் கட்டிக்கொடுத்தார். இதை கோயிலுக்கு வரும் பக்தர்களும் அப்பகுதி மக்களும் பயன்படுத்தினர். இந்நிலையில் இந்த கழிப்பறை மற்றும் குளியறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வசதி இல்லாததால் மூடப்பட்டு புதர்கள் மண்டிக்கிடக்கிறது.

இதனால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கும் உடை மாற்றவே கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.  எனவே முன்னாள் எம்எல்ஏ கட்டிக்கொடுத்த குளியலறையை சீரமைத்து தர வேண்டும். மேலும் அங்குள்ள சிமெண்ட்டால் கட்டப்பட்ட குடிநீர்தொட்டி குடிநீர் இல்லாமல் சேதமடைந்துள்ளது. எனவே இதையும்   சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள்  கூறியதாவது: இந்த கழிப்பறை மற்றும் குளியறை கட்டிடம் பயன்பாட்டில் இல்லாததால் தற்போது அருகில் உள்ள சமுதாய கூடத்தைத்தான் பெண்கள் குளிப்பதற்கும், உடைமாற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதிலும்  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தால் பக்தர்கள் அடிப்படை வசதியின்றி அவதிப்படுகிறார்கள். ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தலையிட்டு இக்கட்டிடத்தை சீர்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: