ஆசை ஆசையாய் திருமணம் ஏற்பாடு செய்தபோது இறந்ததால் தந்தையின் சடலம் முன் தாலி கட்டிய மகன்: கள்ளக்குறிச்சி அருகே நெகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இறந்த தந்தையின் உடல் முன் மகன் தாலிகட்டிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், திமுக பிரமுகர். இவரது மனைவி அய்யம்மாள். பெருவங்கூர் ஊராட்சி தலைவியாக உள்ளார். இவர்களது மகன் பிரவீனுக்கும், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சண்முகநாதன்-சுபாஷினி தம்பதியின் மகள் சொர்ணமால்யாவுக்கும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு திருணமண்டபத்தில் வரும் 27ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இதனிடையே ராஜேந்திரனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று அதிகாலை இறந்தார். மணமகனின் தந்தை திடீரென இறந்ததால், இருவீட்டாரும் மிகுந்த சோகத்தில் இருந்தனர். எனவே இந்த  திருமணம் நடைபெறுமா? அல்லது நின்றுபோகுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில் இறந்த ராஜேந்திரன் உடல் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. உற்றார், உறவினர்கள், அஞ்சலி செலுத்தி வந்தனர். இதில் ஒருசில உறவினர்கள் ராஜேந்திரன் மகன் திருமணத்தை பார்க்க மிகுந்த ஆசையுடன் ஏற்பாடு செய்து வந்தார். ஆனால் மகனுக்கு திருமணம் செய்து வைக்காமலே இறந்துவிட்டாரே என்று வேதனையுடன் புலம்பினர்.

அப்போது சிலர் ராஜேந்திரன் உடலுக்கு முன்பே திருமணம் செய்யலாமே என ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து பெண் வீட்டாரிடம் சம்மதம் கேட்டு, ராஜேந்திரன் உடல் அருகே, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று மதியம்  மணமகன் பிரவீன், மணமகள் சொர்ணமால்யாவுக்கு தாலிகட்டினார். அப்போது மணமக்களை, உறவினர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்தினர். பின்னர் மணமக்கள் இருவரும் ராஜேந்திரன் காலை தொட்டு வணங்கினர். ஒருபக்கம் துக்க அனுசரிப்பும், மறுபக்கம் திருமண வைபவமும் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. மணமகளுக்கு தாலி கட்டிய பின்னர், ராஜேந்திரன் உடலை இடுகாட்டுக்கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.

Related Stories: