ரூ.7.64 கோடிக்கு பொருட்கள் விற்பனை ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: தெற்கு ரயில்வேயில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்கள் அமைத்திட விண்ணப்பங்களை தெற்கு ரயில்வே பெற்று வருகிறது. ரயில்வேயில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருட்கள் விற்பனை ஊக்குவிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இத்திட்டம் பயணிகளை கவர்ந்ததோடு, பயணிகள் தங்களுக்கு தேவையான உள்ளூர் பொருட்களை ரயில் நிலையங்களிலே வாங்கி சென்றனர்.

மதுரை கோட்டத்தை பொறுத்தவரை நெல்லையில் பனை பொருட்கள் விற்பனை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், மணியாச்சியில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல்பாசி பொருட்கள், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விருதுநகர் மற்றும் சாத்தூரில் காரச்சேவு, தென்காசி, செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள் என பல பொருட்களின் விற்பனை அதிகளவில் விற்பனையானது.இத்திட்டத்திற்கு பல ரயில் நிலையங்களில் கிடைத்த வரவேற்பை கண்டு தெற்கு ரயில்வே இத்திட்டத்தை விஸ்தரித்து வருகிறது. மேலும் புதிய உள்ளூர் பொருட்களின் விற்பனையையும் ஊக்கப்படுத்தி வருகிறது. தெற்கு ரயில்வே எல்லைக்கு உட்பட்ட 94 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை ரூ.7.64 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கைவினைப் பொருட்கள், கைத்தறி, ஜவுளிகள், வேளாண் உற்பத்தி பொருட்கள், பால், உணவு வகை, பழங்குடியினர் உற்பத்தி பொருட்கள் மற்றும் வீட்டு தயாரிப்பு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்னோட்டத் திட்டம் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த திட்டம் 483 ரயில் நிலையங்களில் முழு அளவில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மண்டலத்தின் 133 நிலையங்கள், திருச்சி, திருவனந்தபுரத்தில் தலா 65 நிலையங்கள், மதுரையில் 95 நிலையங்கள், பாலக்காட்டில் 56, சேலத்தில் 41 நிலையங்கள் என இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனம் உருவாக்கிய வடிவமைப்பின் அடிப்படையில் நிலையான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்த விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: