அணைக்கட்டு மலை கிராமங்களில் சிக்னல் கிடைக்காததால் அரசு உதவித்தொகை பெற சிரமப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அணைக்கட்டு:  அணைக்கட்டு மலை கிராமங்களில் சிக்னல் கிடைக்காததால் அரசு உதவித்தொகை பெற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. அணைக்கட்டு தாலுகாவில் உள்ள பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, அல்லேரி, குருமலை உள்ளிட்ட மலைகளில் 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். குருமலைக்கு செல்ல தார்சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீஞ்சமந்தை, அல்லேரி, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லைக்கு சாலை வசதியில்லை. முத்துகுமரன்மலை- பீஞ்சமந்தை மலைக்கு தார்சாலை அமைக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இங்கு வசிக்கும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்டோருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. வங்கியில் இருந்து நியமிக்கப்பட்ட ஆட்கள் மூலம் பயனாளிகளின் கைரேகைகள் வைக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கபடுகிறது. இங்கு  சிக்னல் சரிவர கிடைக்காததால் செல்போன்களை உபயோகிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதேபோல் உதவித்தொகைகள் வழங்கும் கருவிக்கும் சிக்னல் கிடைக்காததால் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிக்னல் கிடைக்கும் இடத்திற்கு பயனாளிகளின் கைரேகைகள் பெற்று உதவித்தொகைகள் வழங்குகின்றனர். இதனால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். சிலர் வேறு வழியின்றி 4 அல்லது 5 கி.மீட்டர் தூரம் நடந்த படியும், முதியோர்கள் சிலர் கோல் ஊன்றிய படியும் நடந்து சென்று உதவித்தொகைகள் பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் இந்த நிலையே நீடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் கூலியை பெறவும் சிரமப்படுகின்றனர். எனவே, உதவித்தொகைகளை  மலைகளில் பெறும் பயனாளிகள் மற்றும் 100 நாள் வேலை  தொழிலாளர்கள் சிரமின்றி பணத்தை பெற மாற்று ஏற்பாடுகளை  மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், தமிழ்நாடு மலையாளி பேரவையின் சார்பிலும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டுள்ளது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்பட்டு வந்து சென்றது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப்பார்த்த ஆர்டிஓ, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உள்ளிட்டோர் மலைகளில் மாற்று ஏற்பாடு செய்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலே உதவித்தொகைகள் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் சிரமமின்றி மலை கிராமங்கள் வசிக்கும் மக்கள் உதவித்தொகைள் பெற அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: