பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினருக்கு ரூ10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

இளையான்குடி: பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினருக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையை, நேற்று அவரது மனைவியிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இண்டன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு, டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் படுகாயமடைந்த அர்ச்சுனன், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கடந்த 15ம் தேதி அவர் உயிரிழந்தார். அர்ச்சுனனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நேற்று அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், நேரில் சென்று, அர்ச்சுனன் மனைவி வேணி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சரின் நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்திற்காக காசோலை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார். எம்எல்ஏ தமிழரசி, ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: