ஓசூர் அருகே காட்டுத்தீயில் எரிந்து மாந்தோப்பு நாசம்-விவசாயிகள் அதிர்ச்சி

ஓசூர் : ஓசூர் அருகே காட்டுத்தீயால் மாந்தோப்பு எரிந்து நாசமான சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் அருகே கெலமங்கலம் சாலையில் அச்செட்டிப்பள்ளி பகுதியில், பெங்களூருவைச் சேர்ந்த யசோதாவேணி என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் மாந்தோப்பு உள்ளது. அதனை சூளகிரியைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். தொடர் மழையால் மாமரங்களில் நன்கு பூ பிடித்து காய்ப்புக்கு வந்திருந்து. இந்நிலையில், கடும் வெயில் வாட்டியெடுத்து வருவதால் அப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. நேற்று முன்தினம் தேவராஜ் குத்தகைக்கு எடுத்துள்ள மாந்தோப்பிலும் காட்டுத்தீ பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தீயணைப்பு வீரர்கள் வராததால், தேவராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து டிராக்டர், லாரியில் தண்ணீரை கொண்டு வந்து, தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் சுமார் 2 ஏக்கரில் மா மரங்கள் எரிந்து சாம்பலானது. இதனால், அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மா பிஞ்சுகள் காய்த்து மகசூலுக்கு வரும் வேளையில், மா மரங்கள் எரிந்து சாம்பலானதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயி  கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: