அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே மாடு விடும் விழாவில் 165 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. விழாவில், மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, கெங்கநல்லூர் அடுத்த சீலேரி கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாடு விடும் விழா நேற்று நடந்தது. கிராம மேட்டுக்குடி சண்முகம், ஊர் தர்மகர்த்தா காசி என்ற ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, தாசில்தார் ரமேஷ் தலைமையில் ஆர்ஐ ரேவதி, விஏஓ பிரசாத், விழாக்குழுவினர் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் விழா உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு விழா தொடங்கியது. விழாவில், வேலூர், அணைக்கட்டு, ஊசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 180 மாடுகள் பங்கேற்றது. கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு 165 மாடுகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர், வீதியில் இடது புறம், வலது புறம் என சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள், அங்கு திரண்டிருந்த ரசிகர்களை தெறித்து ஓடவிட்டது. விழா மதியம் 1.30 மணிக்கு முடிக்கப்பட்டது. விழாவில், கொடியசைக்கும் தூரத்தை குறைந்த வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்த முனியம்பட்டி மின்னல் ராணி என்ற மாட்டிற்கு முதல் பரிசாக ₹55 ஆயிரத்து 555ம், 2ம் இடம் பிடித்த விருதம்பட்டு பல்சல்ராஜா என்ற மாட்டிற்கு ₹44 ஆயிரத்து 444ம் வழங்கப்பட்டது. மேலும், எல்இடி டிவி, ரொக்கப்பணம் உட்பட மொத்தம் 40 பரிசுகள் வழங்கபட்டது. சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டியதில் காயமடைந்த பார்வையாளர்கள் 8 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் உரிய சிகிச்சை அளித்தனர். அதில், படுகாயமடைந்த ஒருவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.மேலும், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நடைபெறுவதை வருவாய்த்துறையினர் கண்காணித்தனர்.அட்டகாசம் செய்த வாலிபர்களுக்கு எச்சரிக்கைசீலேரி கிராமத்தில் நேற்று நடந்த மாடு விடும் விழாவில் இளைஞர்கள் சிலர் வீண் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை கவனித்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், பைக்குகளில் வீதிமீறி பயணம் செய்த பள்ளி மாணவர்கள், வாலிபர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.