வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பின்விளைவு தெரியாமல் எப்படி பாஜ நிர்வாகி பதிவிட்டார்? ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி வெளியிட்ட விவகாரத்தில் சமூகத்தின் உயர் பொறுப்பில் உள்ள பாஜ நிர்வாகி, பின்விளைவு தெரியாமல் எப்படி பதிவிட முடியும். ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமென நீதிபதி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு பிரசாந்த்குமார் உம்ராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.ஆனந்த் ஆஜராகி, ‘மனுதாரர் நேரடியாக டிவிட் செய்யவில்லை. பீகார் மாநில ஊடகங்களில் வந்த செய்தியைத்தான் மறு டிவிட் செய்துள்ளார். அவருக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. ஏற்கனவே இந்தி மொழிக்கு எதிராக, ‘இந்தி தெரியாது போடா’ என சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யப்பட்டது. அது தொடர்பாக எந்த வழக்கும் பதியவில்லை. ஆனால், தற்போது மட்டும் பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது’’ என்றார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி, ‘‘அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் இரு மாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே டிவிட் செய்துள்ளார். இதுபோல் ட்விட் செய்வது இதுவே முதல் முறை கிடையாது. ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம் தொடர்பாக தவறான வதந்திகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது ட்விட்டால் தமிழ்நாட்டில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டது. இவரது டிவிட்டை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 5,641 பேர் மறு ட்விட் செய்துள்ளனர். 14.3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதை எந்தப் பிரச்னையுமின்றி சமாளித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக துரிதமாக செயல்பட்டு பிரச்னை ஏற்படாமல் தடுத்தது. வடமாநில தொழிலாளர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் எதிரியாக பார்ப்பதில்லை. குறிப்பிட்ட மொழித் திணிப்பிற்கு தான் எதிராக உள்ளோம். மனுதாரரின் டிவிட்டால் இரு மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்றனர். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் சமூகத்தின் உயர் பொறுப்பில் இருக்கிறார். பாஜ செய்தி தொடர்பாளர் மட்டுமின்றி, வழக்கறிஞராகவும் உள்ளார்.

அவர் எப்படி பின்விளைவுகள் தெரியாமல் பதிவிட முடியும்? அதனால் ஏற்படப் போகும் பிரச்னையின் தீவிரம் அவருக்கு புரியாதா? இதுபோன்ற தவறான பதிவால் நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை ஆபத்தை சந்திக்கும் நிலை உருவானது. ஒரே நேரத்தில் அனைவரும் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில் நிலையத்திற்கு படை எடுத்தனர். ஒரு பெட்டியில் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் நிலை ஏற்பட்டதே?. இதை நான் நேரில் பார்த்தேன். அந்தளவுக்கு அவர்களிடம் அச்சம் பரவியிருந்தது. பொறுப்பின்றி டிவிட் பதிவிட என்ன காரணம்? அதற்கு என்ன உள்நோக்கம் இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும்’’ என்றார். பின்னர் மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Stories: