தாயார் பழனியம்மாள் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓபிஎஸ்சுக்கு நேரில் ஆறுதல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மரணம் அடைந்தார். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த அவரின் சாம்பலை ஓ.பன்னீர்செல்வம் கங்கையில் கரைக்க சமீபத்தில் சென்றார். தாய் இறந்ததை தொடர்ந்து அவர் கட்சி பணிகளை தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசி மூலமும் விசாரித்தனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த முதல்வரை மூத்த நிர்வாகிகள் அழைத்து சென்றனர். ஓ.பன்னீர்செல்வத்திடம் மு.க.ஸ்டாலின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். 10 நிமிடங்கள் அவர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு சென்றனர். அதேபோன்று முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்எல்ஏ பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இருந்தனர். வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டபோது அவரை வாசல் வரை வந்து ஓ.பன்னீர்செல்வம் வழி அனுப்பினார்.

Related Stories: