சென்னை: தமிழில் பெயர் வைத்ததால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்படி உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விகாரம் நடித்த ஐ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை அடுத்து விநியோகஸ்தர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தமிழில் பெயர் வைத்திருந்ததால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்படி உரிமை என உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்தின் பாண்டிச்சேரியின் உரிமையை விஜயலக்ஷ்மி பிலிம்ஸ் என்ற நிறுவனம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு வழங்கவேண்டுமென்ற கோரிக்கையுடன் புதுச்சேரி அரசுக்கு விஜயலக்ஷ்மி பிலிம்ஸ் நிறுவனம் அளித்த நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பட நிறுவனமானது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஐ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கவில்லை என அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் தமிழில் ஐ என்பது வியப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒற்றை வார்த்தை என்றும் அதற்கு அர்த்தம் உள்ளதால் கேளிக்கை வரி விலக்கு வழங்க வேண்டும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதை ஊக்குவிப்பதற்காக தான், அரசு சலுகையாக கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாகவும், இந்த சலுகையை உரிமையாக கோர முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே வரி விலக்கு வழங்கப்படும் எனவும், கேளிக்கை வரி விலக்கு செலுத்த வேண்டும் என அமலில் உள்ளது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் கேளிக்கை வரி விலக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.