ஒருநாள் மட்டுமே பெயரளவுக்கு குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 எகிறியது

சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் பெயரளவுக்கு குறைந்த நிலையில், நேற்று மீண்டும் அதிரடியாக சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. அதே நேரத்தில் சில வாரங்கள் தொடர்ச்சியாக உயர்வதும், அதன் பிறகு சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த 10ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.41,520, 11ம் தேதி சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160, 13ம் தேதி சவரன் ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,600, 14ம் தேதி சவரன் ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,120 ஆகவும் விலை உயர்ந்தது.

அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 வரை உயர்ந்தது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை பெயளரவுக்கு குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,380க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை தொடங்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,425க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43400க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Related Stories: