நாளுக்கு நாள் அதிகரிக்கும் போஸ்டர்கள் கட்சியை விட்டு வெளியேறு... எடப்பாடிக்கு வலுக்கும் எதிர்ப்பு: தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு மண்டலத்துக்கு பரவியது

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைப்பாளராகவும், அதிமுக ஆட்சியில் துணை முதல்வராகவும் ஓபிஎஸ் இருந்தாலுமே உட்கட்சி, கூட்டணி, தேர்தல் தொகுதி, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் என அனைத்திலும் இபிஎஸ் அதிகாரமே கை ஓங்கி இருந்தது. இபிஎஸ்சுக்கு பின்னால் கொங்கு மண்டலம் எம்எல்ஏக்கள் மற்றும் அவரது சமூகத்தை சார்ந்த எம்எல்ஏக்கள் ஓரணியில் திரண்டு ஓபிஎஸ்சுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முயற்சித்தனர்.

இதுதொடர்பாக எடப்பாடி ஏற்பாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால், எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு படுதோல்வியடைந்தார்.

ஒரு பக்கம் நிரந்திர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என கூறிவிட்டு, தற்போது அப்பதவியை கைப்பற்ற துடிக்கும் எடப்பாடி கண்டித்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரை, திருச்சி, உளூந்தூர்பேட்டை, சிவங்கை, திண்டுக்கல், நிலக்கோட்டை, தேனி, சேலம் என பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதை இபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களை கிழிப்பது மட்டுமில்லாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மேற்கு மாவட்ட, மாநகர அதிமுக உண்மை தொண்டர்கள் என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் போஸ்டர்கள் கரூர் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில், ‘கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... அதிமுகவை 8 முறை படுதோல்வி பெறச்செய்து ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு பேராசைப்படும் எடப்பாடியை கண்டிக்கிறோம். வெளியேறு.... வெளியேறு.... அதிமுக சட்ட விதிக்கு முரணாக சமத்துவ பேரியக்கத்தை தனது இயக்கமாக மாற்றிய எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு....’ என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  அதிமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஓபிஎஸ் பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவன் பெயரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஓபிஎஸ் அணி) சார்பில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, பழநி சாலை, திண்டுக்கல் சாலை, செக்போஸ்ட் நாகனம்பட்டி சாலை, ரயில் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல், ராமநாதபுரம், சங்கரன்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மட்டும் எதிர்ப்பு வலுத்த நிலையில், கொங்கு மண்டலமான கரூர், சேலம் போன்ற பகுதிகளிலும் இபிஎஸ் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் வடமாவட்டங்களிலும் எடப்பாடிக்கு எதிரான ஓபிஎஸ் அணியின் போஸ்டர் ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories: