மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சுற்றி திரியும் மனநோயாளிகள் மீட்டு சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஏராளமான மனநோயாளிகள் சுற்றி திரிந்து வருகின்றனர். இவர்கள் அவ்வழியே சென்று வரும் பல்வேறு வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதற்கு முன், அவர்களை மீட்டு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் இசிஆர்-ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மனநோயாளிகள் சுற்றி திரிகின்றனர். இவர்களை பிடித்து, உரிய சிகிச்சை அளிக்க பேரூராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சமூகம் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற மனநோயாளிகளை சொந்த உறவுகளே கூட ஏற்றுக்கொள்வதை கவுரவப் பிரச்னையாக கருதுகிறது.

ஒருவருக்கு மூளை, நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால்தான் இதுபோன்ற மனநோய் வருகிறது. மனநோய் என்பது கடவுளின் சாபம், பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று ஏதேதோ சொல்லி, மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் விட்டுவிட்டு செல்லும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது. இதில் தானாக தப்பித்தோ, வழிதவறியோ வந்தவர்களைவிட, சொத்துக்காக அடித்து துன்புறுத்தி சுற்றுலாவுக்கு வருவது போல் நைசாக அழைத்து வந்து, இங்கு தெரிந்தே விட்டுச் செல்லும் உறவினர்கள்தான் அதிகம்.

இதுபோன்று மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளாக அனாதைகளாக சுற்றி திரியும் ஏராளமான மனநோயாளிகள் சாப்பிட உணவு கிடைக்காமல், தாகம் எடுத்தால் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல், சாலைகளில் வெறிகொண்டு சுற்றி திரிந்து, பின்னோக்கி நடந்து சென்று, அவ்வழியே சென்று வரும் வாகனங்களின்மீது கற்களை வீசி தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, மாமல்லபுரம் இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் வெறிகொண்டு சுற்றி வரும் மனநோயாளிகளை மனிதநேய அடிப்படையில் மீட்டு, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: