வீடற்ற ஏழைகள் விண்ணப்பிப்பதில் சிக்கல்; நகர்புற வாழ்விட வாரியத்திற்கு தனி அலுவலகம் கட்டப்படுமா?: எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

தேனி: தேனி மாவட்டத்தில் நகர்புற வாழ்விட வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளுக்கு வீடற்றவர்கள் விண்ணப்பிக்க தனி அலுவலக கட்டிடம் இல்லாததால் பொதுமக்கள் தவிக்கும் நிலை உள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரை கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 15 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் அடுக்கு மாடி குடியிருப்பு முறையிலும், தரைதள இரட்டை குடியிருப்பு முறையிலுமாக வீடுகள் கட்டப்பட்டு வீடற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வீடு பெற, வீடற்ற மற்றும் நிலமற்ற ஏழைகளாகவும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களில் குடியிருந்து, வருவாய்த் துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால் பாதிக்கப்படுபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பாக இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற ஆதிதிராவிடர்களுக்காக தேனி பொட்டல்குளம், ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டி, கம்பம் உத்தப்புரம் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் வீடுகள் தரைதள இரட்டை குடியிருப்புகளாக சுமார் 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

தேனி அருகே அம்மாபட்டியில் 175 தரைதள இரட்டை குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பழங்குடியின குறவர் மற்றும் நரிக்குறவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல வடவீரநாயக்கன்பட்டியில் 312 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல தப்புக்குண்டுவில் 431 வீடுகளும், கோம்பை அருகே சிக்காச்சியம்மன்கோயில் மேடு அருகே 410 அடுக்குமாடி வீடுகளும், சின்னமனூர் அப்பிபட்டி பகுதியில் 432 அடுக்குமாடி வீடுகளும், போடி அருகே பரமசிவன்கோயில் அருகே, வலசுத்துறையில் 280 அடுக்கு மாடி குடியிருப்புகள், போடி மீனாட்சிபுரத்தில் 240 அடுக்குமாடி வீடுகள் என கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இத்தகைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தன்பங்களிப்பாக குறிப்பிட்ட தொகையும், மத்திய, மாநில அரசின் மானியத்தொகையும் வழங்கப்பட்டு ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் வீடற்ற ஏழைகளுக்கு இத்தகைய வீடுகளை ஒதுக்கீடு செய்ய அவ்வப்போது முகாம்கள் தாலுகா வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தன்பங்களிப்புத் தொகை செலுத்தும் தகுதிபடைத்தோருக்கான வீடுகளை வங்கிக்கடனில் சிறுதவணைகளாக செலுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மதுரை கோட்டத்தின் தேனி மாவட்டத்திற்கான அலுவலகத்தில் ஒரு உதவி நிர்வாக பொறியாளர், 2 உதவி பொறியாளர்கள், 1 சமுதாய அலுவலர் 12 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 சமுதாய பங்கேற்பு உதவியாளர்கள் என 18 அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்துறையில் பணிபுரிவோர் கட்டுமானப்பணிகளை கண்காணிப்பது, கட்டுமானப்பணிகள் முடிந்ததும், இதனை பயனாளிகளை தேர்வு செய்து, வீடுகளை வழங்குவது. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்ய களப்பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு வாய்ந்த இத்துறைக்கு என தேனி மாவட்டத்தில் தனி அலுவலக கட்டிடம் இதுவரை அமைக்கவில்லை. இதனால் வீடற்ற ஏழைகள் இத்திட்டத்தின் கீழ் வீடு பெற வழி தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டங்களின் போது மனு அளிப்பதன் மூலமாக இந்த பட்டியல் வாழ்விட துறைக்கு அனுப்பப்பட்ட பிறகே விண்ப்பதாரர்களை நகர்புற வாழ்விட வாரிய துறை அலுவலர்கள் நேரில் சந்தி்த்து பேசி வீடு வழங்க முடிகிறது. அதேசமயம் இத்துறைக்கென தேனியில் தனி அலுவலகம் இதுவரை ஏற்படுத்தப்படாததால் வீடற்ற ஏழைகள் தங்களுக்கான வீடுகளை கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சில கட்டிட அறைகள் காலியாகவே உள்ளன. இத்தகைய காலிக்கட்டிடத்தை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்தால் வீடு கேட்டு விண்ணப்பிக்க வரும் பொதுமக்கள் எளிதில் அதிகாரிகளை சந்தித்து தங்களுக்கான வீடுகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்பதால் இத்துறைக்கு தனியார் தேனியில் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேனியில் சமீபத்தில் ரயில்வே புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருப்போரை அப்புறப்படுத்த காலக்கெடு அளித்துள்ளனர். இதேபோல தேனி நகரில் ராஜவாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர்.

எனவே, இத்தகைய அலுவலகம் அமைக்கப்பட்டால் ஏழைகள் அவதிக்குள்ளாவது இல்லாத நிலை ஏற்படும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கான அலுவலகத்திற்கு கட்டிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Related Stories: