புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து 3வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அதானி விவகாரத்தை எழுப்பி ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதை முறியடிக்கும் விதமாக ராகுலின் லண்டன் பேச்சுக்களை கண்டித்து பாஜ எம்பிக்கள் அமளி செய்கின்றனர். சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்ததற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் பாஜ எம்பிக்கள் அமளி செய்கின்றனர்.
